search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் விபத்து"

    • தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.
    • குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த கொல்லாச்சேரியில் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-வது படிக்கும் சந்தோஷ் (16) என்ற மாணவர் மாநகர பஸ்சில் படிக்கெட்டில் தொங்கிச் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.

    பலத்த காயம் அடைந்த மாணவன் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இரண்டு கால் பாதங்களும் கடுமையாக சேதமடைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பஸ்சை அஜாக்கிரதையாக இயக்கியதாக பஸ் டிரைவர் கோவூரைச் சேர்ந்த வெங்கடேஸ் மீது குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • விபத்து காரணமாக சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட கலெக்டர் அருணா சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    அருவங்காடு:

    தொடர் விடுமுறையையொட்டி தற்போது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 25 பேர் தனியார் பஸ்சில் ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தனர். ஊட்டியில் பல்வேறு இடங்களை பாரவையிட்ட அவர்கள் நேற்றுமுன்தினம் ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர்.

    அதன்படி இரவு ஊட்டியில் இருந்து அவர்கள் பஸ்சில் புறப்பட்டனர். பஸ்சை டிரைவர் ராஜா என்பவர் ஓட்டினார். குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அந்த பஸ் வந்து கொண்டு இருந்தது. பர்லியார் 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பஸ்சில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனது. இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டை விட்டு விலகி பள்ளத்தை நோக்கி ஓடியது. பள்ளத்தில் இருந்த பெரிய மரத்தில் பஸ் மோதி நின்றது. அந்த இடத்தில் மரம் இருந்ததால் பஸ்சை தாங்கி பிடித்துக்கொண்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் பஸ்சில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். யூனுஸ்கான் என்ற 13 வயது சிறுவன் பஸ்சின் கதவில் சிக்கி தவித்தான். அவனையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அந்த சிறுவன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். சிறுவன் யூனுஸ்கான் கோவை அரசு மருத்துவமனைக்கும், இரண்டு பெண்கள் உட்பட நான்கு சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மீதம் இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான பஸ் உடனடியாக மீட்கப்பட்டது. விபத்து காரணமாக அந்த சாலையில் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விபத்து தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட கலெக்டர் அருணா சம்பவ இடத்தை பார்வையிட்டு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் கொண்டை ஊசி வளைவுகளில் கல்லட்டி மலை பாதையில் போடப்பட்டுள்ள ரப்பர் தடுப்புகள் போன்று இந்தச் சாலையிலும் அமைக்கப்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். குன்னூர் டி.எஸ்.பி. குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    தற்போது விபத்து நடந்துள்ள இடம் அருகே தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து வந்த சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 9 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். அந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் அதன் அருகே மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது.

    • 200 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
    • ஒகேனக்கல்லிற்கு சுற்றுலா சென்றனர்

    செங்கம்:

    பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி குட்கா கடத்தி சென்ற கார் சுற்றுலா பஸ் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    பெங்களூரூவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை காரில் கடத்திக்கொண்டு மர்ம கும்பல் திருவண்ணாமலை நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து ஒகேனக்கல்லிற்கு சுற்றுலா செல்வதற்காக மினி பஸ்சில் சிலர் வந்து கொண்டிருந்தனர்.

    செங்கம் அடுத்த ரோடு கரியமங்கலம் பகுதியில் வளைவான சாலையில் பஸ் திரும்பியது. அப்போது எதிரே வந்த கார் சுற்றுலா பஸ் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் கார் உருண்டு சென்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் நின்றது.

    இதை தொடர்ந்து காரை ஓட்டி வந்த மர்ம கும்பல் காரை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடினர்.

    அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் 10 மூட்டைகளுக்கு மேல் காரில் இருந்தது.

    அதனை பிரித்துப் பார்த்தபோது சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 200 கிலோ எடை கொண்ட குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    சுற்றுலா சென்ற பயணிகள் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் சங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பஸ் சரியாக பராமரிக்கப்பட்டு உள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த விபத்து பற்றிய உருக்கமான தகவல்கள் வருமாறு:-

    தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 59 பேர் கேரளா, நீலகிரி, கோவை மருதமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி, கடந்த 28-ந் தேதி கடையத்தில் இருந்து 59 பேரும் சுற்றுலா பஸ்சில் சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். டிரைவர்கள் 2 பேருடன் சேர்த்து மொத்தம் 61 பேர் இந்த பஸ்சில் பயணித்தனர்.

    முதலில் இவர்கள் கேரள மாநிலம் சோட்டானிக்கரை, குருவாயூர் பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் நேற்று அதிகாலை, கேரளா வழியாக நீலகிரி மாவட்டத்திற்குள் வந்தனர்.

    இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்த்தனர். பின்னர் இரவில் கோவை செல்வதற்காக பஸ்சில் புறப்பட்டனர்.

    பஸ் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், குன்னூர் மரப்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பை இடித்து கொண்டு அங்கிருந்த 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் பஸ்சில் இருந்த முப்புடாதி (67), முருகேசன்(63 ), இளங்கோ(64 ), தேவிகா(42), கவுசல்யா( 29), நிதின்(15), ஜெயா(50), தங்கம்(40) ஆகிய 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.

    மற்றவர்கள் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டு அபயகுரல் எழுப்பினர். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து கயிறு கட்டி கீழே இறங்கி பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்து நடந்த பகுதி மிகவும் இருளாக இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்தபோதிலும் டார்ச் ஒளி வெளிச்சத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்ததும் கோவை சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை துரிதப்படுத்தினர்.

    இறந்த 8 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குன்னூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். காயம் அடைந்தவர்கள் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, கோவை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    செல்லம்மா என்ற மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தொடர்ந்து வேறு யாராவது பஸ்சில் சிக்கி இருக்கிறார்களா என்பதை அறிய இன்று காலையும் மீட்பு பணி தொடர்ந்தது.

    அப்போது பஸ்சின் அடிப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது பெயர் பத்மராணி (57) என்பது தெரியவந்தது. அவரது உடலையும் மீட்டுபிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதனால் விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

    தொடர்ந்து பள்ளத்தில் சிக்கிய பஸ்சை வெளியே கொண்டு வரும் பணியை தொடங்கி உள்ளனர். கிரேன் உதவியுடன் பஸ்சை மீட்கும் பணி நடந்தது.

    சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து, 9 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் நீலகிரிக்கு விரைந்து வந்துள்ளனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

    விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர்(வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை) பிரபாகர், கலெக்டர் அருணா, டி.ஐ.ஜி.சரவணசுந்தர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.

    பஸ்சில் சரியாக பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த பஸ் சரியாக பராமரிக்கப்பட்டு உள்ளதா, அதற்கான சான்றுகள் உள்ளதா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

    • பஸ்களில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தில் இருந்து எல்.எண்டத்தூர் வழியாக காஞ்சிபுரம் நோக்கி தனியார் பஸ் சென்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது, தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. பஸ்களில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய 2 பஸ்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி பஸ்சில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அடுத்த தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 80).

    இவர் இன்று காலை செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பஸ் மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே காசியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    • விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
    • தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத ரோடுகளால் விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    அயகுச்சோவா:

    பெரு நாட்டில் அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ என்ற இடத்துக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். திடீரென அந்த பஸ் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.

    இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 24 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.பலர் காயம் அடைந்தனர், பெரு நாட்டை பொறுத்தவரை தரமற்ற மற்றும் பராமரிப்பு இல்லாத ரோடுகளால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • 3 பேர் பலி
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வங்காரம் மதுரா ஆவணவாடி ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் நாவப்பன். இவரது மகன்கள் கன்னியப்பன் (வயது 50), குரு நாதன் (45). அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் ரவி (50).

    இவர்கள் 3 பேரும் ஒரே மொபட்டில் காமராஜர் நகரில் இருந்து வந்தவாசி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.

    வந்தவாசி - சேத்துப்பட்டு செல்லும் நெடுஞ் சாலையில் வங்காரம் கூட்டு ரோடு பகுதியில் போளூர் நோக்கி சென்று கொண்டிருந்த மினி பஸ் திடீரென மொபட் மீது மோதியது.

    இதில் மொபட்டில் வந்த அண்ணன், தம்பி உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னூர் போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 24). தெருக்கூத்து கலைஞர். திருமணமாகி மனைவி சுகன்யா மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் செல்வம் சாலை கிராமத்தில் இருந்து அரக்கோ ணத்தில் உள்ள மனைவியை பார்ப்பதற்காக நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அரக் கோணம் சோளிங்கர் ரோடு - ரெயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப் போது அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற தனி யார் தொழிற்சாலை பஸ் எதிர் பாரதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் கீழே விழுந்த செல்வம் பஸ்சில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வத்தை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

    இந்த விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • பள்ளத்தில் விழுந்த வேகத்தில் வேன் தீப்பிடித்து எரிந்தது.
    • விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    பலுஸ்திஸ்தான்:

    பாகிஸ்தான் கில்கிட் பலுஸ்திஸ்தான் பகுதியில் சுற்றுலா மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்று கொண்டு இருந்தது. இந்த வேனில் 16 பேர் பயணம் செய்தனர்.

    டைமர் மாவட்டம் பாசார்பாஸ் என்ற பகுதியில் சென்ற போது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் வேனில் சென்ற பயணிகள் உயிர் பயத்தில் அலறினார்கள். பள்ளத்தில் விழுந்த வேகத்தில் வேன் தீப்பிடித்து எரிந்தது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை உள்பட 8 பேர் இறந்தனர். 4 பெண்கள், 4 குழந்தைகள், மற்றும் ஒரு ஆண் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    பாகிஸ்தானில் இம்மாத தொடக்கத்தில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் விழுந்து 6 பேர் பலியானார்கள். பலுகிஸ்தான் பகுதியில் பல ரோடுகள் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் நடந்து வருவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்ட சூர்யா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    • கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரை கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சூர்யா (வயது19). கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் நேற்று மாலை வழக்கம் போல கல்லூரி முடிந்து கோயம்பேடு நூறடி சாலையில் தே.மு.தி.க. அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார்.

    பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக அவ்வழியே வந்த மாநகர பஸ்சில்(எண்48சி) முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினார். அப்போது திடீரென டிரைவர் பஸ்சை வேகமாக இயக்கியதாக தெரிகிறது. இதனால் படிகட்டில் நின்ற சூர்யா எதிர்பாராதவிதமாக கால் தவறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக் கொண்ட சூர்யா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாலத்தை உடைத்துகொண்டு பஸ் ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
    • உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொழும்பு:

    இலங்கை பொலன்ணறுவு கதுருவெலாவில் இருந்து ஒரு தனியார் பஸ் காத்தான் குடிக்கு நேற்று இரவு புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் குழந்தைகள் உள்பட 70 பேர் பயணம் செய்தனர்.

    வழியில் அந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அங்குள்ள பாலத்தை உடைத்துகொண்டு பஸ் ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மரண பயத்தில் அலறினார்கள்.

    இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆற்றுக்குள் விழுந்த பஸ் பல மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ×